”உள்ள போ எனக்கு வேலையிருக்கு அப்புறம் நீ வந்த விசயத்தை உன் அண்ணன் கிட்ட நான் சொல்லவா இல்லை நீயே சொல்றியா”
“இல்லை நானே சொல்லிடறேன் உனக்குதான் ஏதோ வேலையிருக்கே”
“சந்தோஷம் இதான் வழி உள்ள போ” என சொல்லிவிட்டு அவன் கோயில் நோக்கி நடக்கலானான். எப்போதும் தாஸுடன் செல்பவன் இன்று அவன் மட்டும் செல்வதைக் கண்டு அதிர்ந்த தாஸோ அவளது 3 பெட்டிகளையும் அவசரமாக தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் வைத்தான். அதைப்பார்த்த வீட்டில் இருப்பவர்கள் என்ன ஏது என கேட்க அந்நேரம் சரண்யாவிடம் தேவா பேசுவதைக் கண்டு வியந்தார்கள். தாஸ் அதற்கு மேல் நில்லாமல் தேவாவை தேடி ஓட வந்த பெண்ணைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஒரு கதை கட்டினார்கள்.
அதிலும் பாட்டி
”என் தேவா இப்படி எந்த பொண்ணோடவும் பழகமாட்டானே, வீட்ல இருக்கற பொண்ணுங்களோடவும் அவன் பேச மாட்டான். இப்ப புதுசா ஒரு பொண்ணோட வர்றானா என்ன அர்த்தம், ஒருவேளை அவன் அந்த பொண்ணை விரும்பறானா என்ன” என நினைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்த சரண்யாவிடம்
”யார்மா நீ தேவாவோட வர்ற”
“அவரோடதான நான் வந்தேன். அவர்தான் என்னை இங்க இருக்கச் சொன்னாரு” என சொல்ல பாட்டிக்கு ஆனந்தமே வந்தது
”ஓ என் பேரனே உன்னை கூட்டிட்டு வந்துட்டானா நல்லது நல்லது ஆமா நீ மட்டும் வந்திருக்க வேற யாரும் வரலையா”
“ம்ஹூம் யாரும் வரலை எனக்காக யாரும் வரமாட்டாங்க”