(Reading time: 44 - 87 minutes)

போச்சுடா” என்று மதியழகனும், மித்ராவும் தலையில் கைவைத்து கொள்ள, சம்யுக்தாவையும் இஷானையும் தூக்கிக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தான் ஷக்தி. மூன்று வயது நிரம்பிய மகனும் மகளும் இன்னும் தெளிவாய் பேச ஆரம்பிக்கவில்லை..ஆனால்,அவனிடம் சொல்வதற்கு இருவருக்கும் ஆயிரம் கதைகள் இருந்தன. அவ்வப்போது யார் முதலில் பேசுவது என்று இருவரும் சண்டை போட்டுக்கொள்ள, இருவருக்குமே விட்டுகொடுத்து பேச வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தபடி அவர்களின் பேச்சை ரசித்தான் ஷக்தி. இமைக்க கூட தோன்றாமல் மித்ரா இருவரையும் ரசிக்க, “இன்னைக்கு நமக்கு நாமளேதான் காஃபி போட்டுக்கனும் போல” என்றபடி சமையல் அறைக்குள் புகுந்து கொண்டான் மதியழகன்.. சம்யுக்தா, இஷான் இருவருக்கும் பூஸ்ட், மற்ற மூவருக்கும் காஃபியை அவன் கொண்டுவரும்போது தான் கணவன் மனைவின் இருவரும் நடப்புக்கு வந்தனர்.

“ அய்யோ அண்ணா சாரிண்ணா” என்று மித்ரா குற்ற உணர்வில் தாழ்ந்து பேசிட

“ அடவிடும்மா,நம்ம வீடுதானே” என்றான் மதி.

“ எப்படி இருக்கீங்க அண்ணா?”

“இப்போவாவது உனக்கு கேட்கனும்ன்னு தோனிச்சே ஷக்தி” என்றான் மதி நக்கலாய்.

“ ஹா ஹா.. என்னண்ணா பண்ணுறது ? இவங்க ரெண்டு பேரும் தானே என் உலகமே” என்று அவன் கூற

“அஹெம் அஹெம்” என்று மித்ரா இறும

“ நீயும் நானும் வேற வேறயா மிது”என்று அவன் சமாளிக்க

“ நல்ல குடும்பஸ்தன் ஆகிட்ட ஷக்தி நீ” என்றான் மதியழகன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ருத்துவமனை..! தனது எதிரில் இருந்த அந்த ஃபைலையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்நிலா. ஃபைலின் மேலே “நிரூபணா” என்று அந்த பெண்ணின் பெயர் எழுதி இருந்தது. அவளை நினைக்கும்போதே நிலாவுக்கு வேதனையும் பெருமையும் ஒன்றாய் எழுந்தது.

நிரூபணா, சில மாதங்களுக்கு முன்பு காமப்பசி கொண்ட மிருகங்களால் வேட்டையாடப்பட்டு குடும்பத்தாலும் நிராகரிக்கப்பட்டு பாதி உயிராய் தவித்தப்போதுதான் நிலாவின் கண்களில்பட்டாள். ஒரு மருத்துவராக மட்டுமின்றி, சகோதரியை போலவே அவளை அரவணைத்தாள் தேன்நிலா. சில நாட்கள் தாண்டித்தான் அவள் கருவுற்றிருப்பது  அவர்களுக்கே தெரிந்தது. எந்த காரணம் கொண்டும் இந்த குழந்தையை நிராகரிப்பதாய் இல்லை என்பதில் தெளிவாய் இருந்தாள் நிரூபணா.

“ இது அவனுங்களோட குழந்தை இல்ல அக்கா..என் பிள்ளை..என் பிள்ளையை நான் நல்ல விதமாய் வளர்ப்பேன்.. என் பிள்ளையின் முன்னேற்றத்தை பார்த்து என் குடும்பமே என்னை தேடி வருவாங்க பாருங்க” என்றவளின் முகத்தில் தைரியத்தை தவிர எதையும் நிலாவால் பார்க்க முடியவில்லை..

பெண் என்பவள் மாபெரும் சக்தி,.!

“துன்பமிலாத நிலையே சக்தி” என்றார் பாரதி.. ஆனால்,ஒவ்வொரு பெண்ணும் துன்பத்தின்போதுதான் தனக்குள் இருக்கும் சக்தியை உணர்ந்து கொள்கிறாள். நிரூபணாவும் அப்படித்தான்.. அன்று தனக்கென்று அநியாயம் நிகழும்போது இந்த தைரியம் வந்திருக்க கூடாதா? என்று பலமுறை தன்னையே கேட்டுக்கொண்டாள். இருப்பினும் நடப்பவை இனி நல்லதாகவே இருக்கும் என்று நம்பினாள் அவள்.

ஆனால்..! நிரூபணாவின் மனநிலைக்கு நிகராய் அவளின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அவள் உடல்நிலை மிகவும் மோசமாய் ஆனதோடு, திடீரென்று அவள் உடலில் இருந்து குறுதி வெளியேர தொடங்கியது. உடனே அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அவள் உயிருக்கு நிச்சயம் ஆபத்து தான் !அதை நிலாவும் உணர்ந்திருந்தாள். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் மனமில்லை அவளுக்கு..

“ இல்ல நிரூ.. உனக்கு ஒன்னும் ஆகாது..நீ சரி ஆகிடுவ” என்ற நிலா தனது மனக்கவலைகளை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு நிரூபணா இருந்த அறைக்குச் சென்றாள்.

எண்ணம் என்பது எத்தனை மகத்துவமாய் இருந்தாலும் கூட இயற்கையை மாற்றும் திறன் எப்போதும் அதற்கு இருப்பதில்லை. அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த தன் மகளை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த நிரூபணா,நிலாவின் கைகளில் தன் குழந்தை இருக்கும் காட்சியை மனநிறைவோடு பார்த்துவிட்டு நிரந்தரமாய் கண்மூடினாள். மருத்துவராக, நிலாவுக்கு இது புதிதில்லை தான்..ஆனால், நிரூபணா பலரில் ஒருத்தி இல்லையே.! அவளின் மரணம் நிலாவை பெரிதும் பாதித்தது.

நாட்கள் அதன்போக்கில் போய்கொண்டே நிலா மட்டும் கவலையிலேயே உழன்று கொண்டிருந்தாள். அவளுக்குமே இப்படி இருப்பதில் இஷ்டமில்லைத்தான். அதுவும் தனது நிலையை கண்டு வாடி போகும் மனோ, பாக்கியம்,மதியழகன் மூவரை பார்க்கும்போதே அவளுக்கே தன் மீது கோபம் வந்தது.

நிறைய புத்தகங்களை படித்தாள், அடிக்கடி வெளியே சென்றாள், சம்யுக்தா, இஷான் இருவருடனும் அதிக நேரத்தை செலவழித்தாள், பாட்டுக் கேட்டாள்..தன்னால் இயன்ற அளவு அவள் இயல்பாக முயல அனைவருமே அவளுக்கு துணையாகத்தான் இருந்தனர்..அதிலும் மதி தான் அவள் கூடவே இருந்தான்.. அவள் மௌனமாய் இருக்கும்போது கூட, அவளை எதுவும் சொல்லாமல் துணையாகவே இருந்தான். ஆனால் அவனுக்குள் பிரளயமே வெடித்தது. இன்று சரியாகிவிடுவாள், நாளை சரியாகிவிடுவாள் என்று அவன் காத்திருந்து இதோ ஒரு மாதம் கடந்து விட்டது.இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், காத்திருக்க அவன் தயார்..ஆனால் இப்படி அவள் வழியில் போவது,இன்னும் அவளை ஒடுக்கி வைக்கும் என்றே தோன்றியது அவனுக்கு..இப்போது இருக்கும் கவலையை அவள் மறக்க வேண்டுமெனில் இதைவிட பெரிய கவலையை அவளுக்கு அவன் தர வேண்டும்.. (உடனே நம்ம மதி அண்ணா, மறுபடியும் சிங்கபூருக்கு ஓடி போயி நிலாவுக்கு ஷாக் ட்ரீட்மண்ட் கொடுப்பாரா? நோ நோ நோ!இது அதுக்கும் மேல).

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.