(Reading time: 34 - 68 minutes)

முதலில் கறு வர்ண நிழல்போல் கண்ணில் தெரிய தொடங்கிய அதில் மெல்ல மெல்லமாய் வர்ணமேறுகிறது….

ருயம்மாதேவி தன் எதிரில் நின்றிருந்த அந்த பாண்டிய தளபதியின் பார்வையை  தன் முகம் மறைத்த அந்த மென் துகில் வழியாக ஆராய்ந்தாள்….

இருந்த விளக்கின் வெளிச்சத்தில் அவன் இவள் உருவத்தை பார்க்க அல்ல படிக்க முனைகிறான் என்பது இவளுக்கு புரிகிறது. அதீத ஆர்வம் அவன் கண்களில்……

 முதல் கணம் அது இவள் சிந்தையில் பெண்மையின் சினத்தையும் சீற்றத்தையும்  கொண்டு வருகிறது என்றால் அடுத்த கணம்….. அப்பார்வையின்  களங்கபடுத்தாத ஆராய்தல்…..

அவன் மன்னனுக்கு இவன்தான் இவளைப் பற்றி சொல்ல வேண்டிய நபர் என்ற புரிதல்  மனதில் உற்பத்திவிக்க…..தன்னை சாந்தி படுத்திக் கொண்டாள்…..இது அவனது பணி…..அதை செய்கிறான் அவ்வளவே…

 கூடவே சற்றாய் ஒரு பதற்றம்…..கண்டு கொள்வானோ??

ஆனால் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் அவன் இவளை அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பற்று போகவேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பாக இந்த பச்சை வர்ணத்தை இவள் தெரிந்தெடுத்ததும் கூட….. ஆக தைரியமாக அவனை முகமோடு முகம் நோக்கி நிமிர்ந்த வண்ணமே பேசினாள் இவள்….

“இச்சூழலில் பாண்டிய சேனாதிபதி அவர்கள் எங்களுக்கு உதவ முன் வந்திருப்பதற்கு நன்றி செலுத்துகிறது காகதீயம்…....தங்கள் பக்க கருத்தை பகிர்ந்து கொண்டீர்களானால் நாம் நிதானித்து ஒரு முடிவுக்கு வரவும் ஆயத்தங்களில் ஈடுபடவும் துவங்கலாம்….” இவள் இப்படியாய் ஆரம்பிக்க….

“இத்தகைய நிலையில் எம்மை தங்களவராய் ஏற்று செயல்பட அனுமதிக்கும் வருங்கால பாண்டிய மகராணியின் எங்கள் மீதான நம்பிக்கைக்கு பாண்டியம் கடமைப்படுகிறது…. நன்றி” என இவள் நன்றிக்கு பதிலாக நன்றி பரிவர்த்தனை செய்தவன்….

அந்த பாண்டிய மகராணி பதத்தில் இவள் இடைக்கும் இதய பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் எரிபந்தம் ஏற்றியிருக்கிறோம் என்பதை கிஞ்சித்தும் உணராதவனாய்….அடுத்து விழி அசையும் நேரம் கூட விரயம் செய்யாது

“சைலபத்திரரே கோட்டையின் வீரர்களின் மொத்தம் எண்ணிக்கை உமக்கு தெரிந்திருக்கும் …... அவர்களில் ஒரு நூறு எண்ணிக்கையில் உள்ளவர்களை மட்டும் தெரிந்தெடுத்து இரு அணியாக பிரியும்…. ஒன்று உமது தலமையிலும் மற்றொன்று எனது தலைமையிலும் எதிரிகளை விரட்டி அடிக்க வெளியே செல்லும்…..” கம்பீரமும் அனுபவமும் அத்தனை திடநம்பிக்கையும் ப்ரகாசிபிக்க அவன் தன் திட்டத்தை விவரிக்க தொடங்கினான்.

 அது இவள் செவிகளில் விழவும் திக்பிரமித்து நின்றாள் ருயம்மாதேவி. முற்றுகைக்கு வரும் எந்த எதிரியையும் கோட்டைக்குள் இருந்து எதிர்ப்பதுதான் பாரம்பரியம் மற்றும் ஞானம்.

கோட்டை மலைமுகட்டில் இருக்க….கீழிருந்து மேலேறி வரும் எதிரியை கோட்டையின் உயரத்திலும் மாறைவிலுமிருந்து தாக்குவது எளிது…. அந்த நோக்கத்தில் கட்டப்படுவது தானே கோட்டை….

இதில் வெறும் நூறு பேரை, அதுவும் இரண்டு பிரிவாக அதையும் பிரித்து அழைத்துக் கொண்டு ஆயிரக் கணக்கானோர் அடங்கிய சைன்யத்தை எதிர்க்க கோட்டை மறைவை தாண்டி வெளியே போவதாமா? யானைகூட்டத்தின் காலிடைப்பட்ட சிறு எலிகளின் நிலையாகிவிடாதாமா இவர்கள் கதை?

 ‘இது தற்காப்பு முயற்சியா இல்லை தற்கொலை முயற்சியா…..’ என்ற எண்ணம் இவளுள் கட்டாற்று வெள்ளம் போல் சடுதியாய் அவதரிக்க….அது தோன்ற துவங்கிய அதே கணம் அவன் போர்தந்திரமும் புரிய பிரமித்து நின்றாள் பெண்.

“சைலபத்திரரே சேனாதிபதியாரின் வார்த்தைகளை எம் வார்த்தையாய் பாவித்து அனைத்தையும் நிறைவேற்றிக் கொடும்….தீபந்த ஆயத்தங்கள் இப்பொழுதே ஆரம்பமாகட்டும்…. நம் நால்வரை தவிர திட்டம் என்னவென வேறு யாருக்கும் விவரிக்க வேண்டாம்….ரகசிய காப்பு இதில் பிரதானம்…”  பாண்டிய தளபதி மானகவசன் தன் திட்டத்தை விளக்கி முடிக்கவும் இப்படி ஒரு கட்டளையை ஆக்ஞாபித்த இளவரசி வாயு வேகத்தில் அங்கிருந்து அகன்றாள்.

சேனாதிபதியின் திட்டம் வெகுவிவேகம்தான்….உயர் ராஜதந்திரம்தான்….ஆனால் அதைத்தான் செயலாற்றப் போகிறானா இந்த பாண்டிய படைதலைவன்? இல்லை அவனது ராஜதந்திரத்தை இவர்களிடமும் செயல்படுத்துவானா?

 இஃது திட்டமென இவர்களை ஏய்த்துவிட்டு மறைமுகமாக அவன் அந்த துருக்கியருக்கு தூது சொல்வானாகில் என்னவாகும்? ஆகையால் மறைமுகமாக அவனை கண்காணிக்க வேண்டியது அதி அவசியம். அதற்கு அவளது ஆண்வேஷம் உத்தமம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.