(Reading time: 34 - 68 minutes)

வளைப் பொறுத்தவரை துருக்கிய எதிரிகளை கணக்கெடுப்பதோடு  இவள் இந்த பாண்டிய சேனாதிபதி ஒற்றறியத்தான் செல்கிறானா அல்லது எதிரிகளுக்கு ஒற்று கூறப் போகிறானா என கண்காணிக்கவும் வேண்டும்….

ஒற்றறிய தளபதிதான் செல்ல வேண்டுமா என்ன? இதை “தாங்கள்தான் இப் பணிக்கு செல்ல வேண்டுமா சேனாதிபதியாரே….எங்கள் படை வீரர் ஒருவரை அனுப்பலாமே…..இந்த பகுதிகளை அவர் நன்கு அறிந்தவராகவும் இருப்பாரே….?” என வினவிப் பார்த்தாள் இவள்.

இப்போரின் முழு வெற்றியும் எதிரிகளுக்கு நம்மைப் பற்றி எதுவும் தெரியாமலிருப்பதில் தான் அடங்கி இருக்கிறது….அப்படி இருக்க அவ் வீரன் ஏதோ ஒரு வகையில் எதிரியின் கையில் சிக்கினால் அக்கணமே நம் தோல்வியும் மரணமும் நிர்மாணிக்கப் பட்டுவிடும்….. ஆதலால் போரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஒரு செயலை நானே செயல் படுத்துவதுதான் சரியென்று படுகிறது….அதோடு எனது திட்டத்தை செயல்படுத்த இப்பகுதிகள் பற்றிய ஞானமும் எனக்கு அத்யாவசியம்” என்றுவிட்டான் அவன்.

அதில் சந்தேகிக்கவோ தடுக்கவோ ஏதுமில்லை ஆகையால் இவனை இதற்கு அனுமதித்து உடனாக இவளும்….

ஆகையால் தொலைவிலிருக்கும் பகைவர் மீதும்…..அருகில் பயணிக்கும் இப் பாண்டியன் மீதும் இவள் கவனத்தை வைத்தாக வேண்டும்…..இந்த ஒற்றியும் செயல்…இப்படியான இரவுப் பயணம்….அதுவும் ஒரு பாதுகாப்பும் இன்றி எதிரி என சந்தேகிக்கும் ஒரு ஆணுடன்….இதெல்லாம் அவளை இயல்பாய் உணரவிடாமல் தடை செய்தன…

அருகில் வருபவனை மீண்டுமாய் அந்நிலவொளியில் பார்த்தாள்….அவன் கண்கள் வேட்டையாட வியூகம் அமைக்கும் புலிப் பார்வையை சுமந்திருந்தன……சூழ்நிலையை முழுவதுமாய் தன் நினைவுக்குள் அவன் நிரப்பி வைக்க எடுக்கும் முயற்சி இவளுக்கு புரிகின்றதுதான்….

உண்மையில் இவன் நோக்கம் தற்காப்பு மட்டும்தான் போலும்….துருக்கியரிடம் தூது போகவில்லை தான் போலும்….

தொலைவில் துருக்கியர் பதுங்கி இருப்பதாக நம்பப்படும் அந்த வன பகுதியைப் பார்த்தாள்….அசைவற்று அமைதியாய் அது….

ஆனாலும் இவனிடம் எத்தனை கவனம்….

“பிரபு தங்களிடம் ஒரு வினா?” அமைதியை கலைத்து இவள் தான் துவங்கினாள்.

“கேளும்” இவள் புறம் திரும்பாமலே வந்தது விடை அவன் புறம்….

“காகதீயத்திற்காக நீர் உயிரை பணயம் வைப்பது எதனாலோ? தாய்நாட்டை ஆபத்தில் விட்டு தலை மறைவானால் அது புறமுதுகு…… அது சுயநலத்தின் உச்சம்…. ஆனால் இப்போது உம்மை காப்பாற்றிக் கொள்ள நீர் ஓடி மறைந்திருக்கலாமே….?

இப்பொழுது இவளை ஒரு முறை அவன் திரும்பிப் பார்ப்பது இவளுக்கு புலனாகிறது….

“உயிர்களில் பாண்டிய உயிர் காகதீய உயிர் என பலவகை இருப்பதாக உமக்கு நினைப்போ…?” இவ்வாறு ஒரு பதில் அவனிடமிருந்து.

அது இடித்து எழுப்பிய குமுறலை….அரும்பாடுபட்டு அடக்கியவள்…..”ஆக துருக்கிய உயிர் மட்டும் தனியாக இருக்கிறது போலும்…” என வார்த்தை ஈட்டி சொருகினாள்.

சற்று முன் வரை இதே காகதீயத்தின் எத்தனை பத்தினிகளை இவன் மன்னன் செய்தனுப்பிய வாள் விதவை ஆக்கியதோ?……எத்தனை இளங்குருத்துகளை கழுத்தறுத்ததோ….? இதில் இன்று நட்பு என கரம் கோர்த்துக்  கொண்டு இப்படி ஒரு சான்றோன் சத்புத்திரன் வகை பறை அறிவிப்பு…அலை கொந்தளிப்பு அவளுள்…

 “உயிர் என்று பார்த்தால் துருக்கிய உயிர் என்றும் எதுவுமில்லை தான்……” எவ்வகையிலும் இயல் நிலை மாறா ஒரு குரலில் ஆமோதிப்பாய் அவன் மறுதலித்தான்….

“ஆனால் போர் என்பது தற்காப்பு….. இந்த தற்காப்பு மரணத்திலிருந்து தப்பிக் கொள்ள ஏறெடுக்கும் முயற்சி இல்லை…..இது வேறு…. உயிரை காக்க நாட்டின் அனைத்து மக்களையும் போர்களத்தில் வந்து உயிர் துற என  எவ்வகையில் கேட்க இயலும்….?அவ்வாறு கேட்பதில் ஏது ஞானம்? இங்கு தற்காப்பு என்பது முற்றிலும் வேறு….”

அவன் பதிலை பகுத்தறிய முடியாமல் பார்த்தாள் இவள்….

“உமக்கு சகோதரிகள் இருக்கிறார்களா ருயமரே?”

“ஆம்….இருக்கிறார்களே.. ஏன்?”

“அதில் ஒருவர் நோய்வாய்பட்டு இறந்து போவது என்றால்…?” அவன் வினா தன் தமக்கை முகத்தை இவள் கண் முன் கொண்டுவர…. அவன் ஏதோ விளக்க முயல்கிறான் என உணர்ந்து

அதன் கசமை மாறாமல்….”பெரும் வேதனை தரும்” என பதில் பகிர்ந்தாள்.

“அவரே காமுகர்களால் கற்பு சூறையாடப்பட்டு நடுவீதியில் கிழித்தெறியப்பட்டால்…..?” எப்பொழுது இவள் வாளை உருவினாள் எனவும் தெரியாது….எவ்வகையில் சீறினாள் எனவும் தெரியாது……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.