(Reading time: 25 - 50 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை. எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது. ஆனாலும் யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது? இன்னும் சிறிது நேரத்தில் இறங்கப் போகிறோம் என்று பொறுத்துக் கொண்டிருந்தேன். அவனுடைய பார்வை என் மேலேயே இருந்தது. இந்தப் பாவிகள் எல்லாரும் அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? இவர்கள் தங்கள் குடும்பத்தில் பெண்களையே பார்த்ததில்லையா? என்ன நாடு இது! என்ன நாகரிகம் இது என்று வெறுப்போடு இருந்தேன். நான் இறங்கும் இடம் வந்தது. எழுந்தேன். அவன் என் பக்கத்தில் உராய்ந்து நின்றான். வழிவிடுங்கள்" என்றேன். வழிவிடுவது போய் விலகி நான் முன்னே சென்றவுடன், என் பக்கத்தில் நெருங்கி வந்து தானும் இறங்கத் தொடங்கினான். பஸ்ஸை விட்டு இறங்கித் தரையில் கால் வைக்கும் நேரத்தில், என் கையில் இருந்த புத்தகங்களையும் சிறு தகரப் பெட்டியையும் வேண்டும் என்றே தட்டிக் கீழே விழச் செய்தான். பிறகு தானே விரைந்து பரபரப்பாக அவற்றை எடுத்துத்தர முனைந்தான். "வேண்டா விட்டுவிடு. நான் எடுத்துக் கொள்வேன். வேண்டும் என்றே தட்டிவிட்டு இப்போது எடுத்துத் தர வருகிறாயா?" என்று கோபத்தோடு கேட்டேன். 'யார்? நானா? நல்லதற்குக் காலம் இல்லை'மா என்று எதிரே நின்று மீசைமேல் கைவைத்தான். அப்போது அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர் என்று இரண்டு அறைகள் விழுந்தன. அறைந்தவர் வேறு யாரும் இல்லை, சந்திரன்தான். உடனே முரடன் அவரை அடிக்கக் கை ஓங்கி ஓர் அடி கொடுத்தான். அதற்குள் பஸ்ஸில் இருந்தவர் இருவர் இறங்கி அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு இருவரையும் விலக்கினார்கள். 'இந்த ஆள் கடற்கரையிலிருந்து என்னைத் தொடர்ந்து வருகிறான்' என்று வழியில் நடந்தவற்றை எல்லாம் நான் சொன்னேன். முதலிலிருந்தே தாம் எல்லாவற்றையும் பார்த்து வருவதாகவும் மனம் கேட்காமல் தாமும் அந்தப் பஸ்ஸில் ஏறி வந்ததாகவும் சந்திரன் கூறினார். 'வேண்டும், வேண்டும், அந்த முரட்டுப் பயலை நன்றாக உதையுங்கள்; நாங்களும் கவனித்தோம். அவன் வேண்டுமென்றே செய்ததுதான்' என்று பஸ்ஸில் இருந்த இரண்டு மூன்று பேர் குரல் கொடுத்தார்கள். 'சரி விட்டுத் தொலையுங்கள்' என்றனர் சிலர். 'அப்படியே கையோடு அழைத்துக்கொண்டு போய்ப் போலீஸ் நிலையத்தில் எழுதி வைக்கவேண்டும்' என்றனர் சிலர். 'விடுங்கள் அவனே பி.ஏ. படித்துப் பிறகு போலீசு இன்ஸ்பெக்டர் வேலைக்கு வந்தாலும் வரலாம். சொல்லிப் பயன் இல்லை. நாகரிகம் வரணும்' என்றார் ஒருவர். அந்த முரடன் சந்திரனை உற்றுப் பார்த்தபடியே அப்பால் நகர்ந்தான். 'சரி நான் போய் வருகிறேன். வணக்கம்' என்றார் சந்திரன். வீட்டு வரைக்கும் வந்து போகுமாறு கேட்டுக்கொண்டேன்.

  

"சந்திரன் உண்மையாக அடித்தானா?" என்று நான் வியப்போடு கேட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.