(Reading time: 42 - 84 minutes)

அவள் கரத்தைப் பற்றியவன் பேசத் தொடங்க அவர்கள் காதலைச் சொல்லிக் கொள்ள நேரம் கொடுத்து நாம் அங்கிருந்து நகர்வோமா?

ராஜ் வேலையினின்று ஓய்வு பெற்றவராக தாயகம் வந்து விட்டிருந்தார். மகனின் திருமணத்திற்கான வேலைகளை பெருமிதமாக முடுக்கி விட்டுக் கோண்டு உற்சாகமாக இருந்தார். தான் ஆசைப்பட்ட மாதிரியே தங்கை மகளை மகனுக்கு மணம் முடிக்க இருப்பது வேறு இன்னும் மகிழ்ச்சி சேர்த்தது. வந்த உடனேயே அனிக்காவை சென்றுப் பார்த்து தன் பரிசுகளை அளித்து வந்தார். இந்திரா தன்னுடைய பொறுப்புக்களை பகிர கணவர் கூடவே வந்து நிற்க இலகுவாக உணர்ந்தார். ஜாக்குலினும் குடும்பத்தோடு வந்துவிட வீடு திருமணக் களைக் கட்டத்தொடங்கியது. அம்மா, அப்பா, அக்கா, அத்தான், அண்ணா அண்ணி, தம்பி என ஒரு குழுவே தன் திருமண வேலைக்கு உதவ இருக்க ரூபனுக்கு நிச்சயதார்த்தம் அன்று இருந்த வேலைப் பளுவில் கால்வாசி கூட தற்போது இல்லை.

ஃபேக்டரியில் அதிகப்படியான வேலைகள் குறைந்து வழக்கமான ஷிப்டுகள் மட்டும் வேலை ஓடிக் கொண்டிருக்க ரூபனும், ஜீவனும் நேரமே வீட்டுக்கு வந்து விட ஆரம்பித்தனர். ஜீவனுக்கான ஃபேக்டரி குறித்த வேலைகளை ஆரம்பிக்க இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் இருக்க அவற்றை ரூபனின் திருமணத்திற்கு பின்பே ஆரம்பிக்க எண்ணியிருந்தனர்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ரூபன் அனிக்கா திருமண நாளும் வந்தது. இருவர் வீடும், வீட்டிலுள்ளவர்கள் அகமும்,முகமும் மகிழ்ச்சியால், நிறைவால் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது.

நாளுக்கு நாள் அனிக்காவின் முகப் பொலிவு கூடிக் கொண்டே சென்றது. அது ஒப்பனையாலா மனதின் மகிழ்ச்சியாலா என்று யாராலும் கணிக்க இயலவில்லை.

முன் தினம் ரூபனை ஆலயத்தில் பார்த்ததை அவள் நினைவு கூர தானாகவே மகிழ்ச்சியில் , வெட்கத்தில் அவள் முகம் மலர்ந்தது. எந்த ஒரு திருவருட்சாதனமாயினும் அதை பெறுவதற்கு முன்னதாக ஆலயத்தில் confession எனும் பாவ மன்னிப்பு பெறுதல் அவசியம், திருமணமும் திருவருட்சாதனங்களில் ஒன்றாகும். அதனால் பாவ மன்னிப்பு பெறும் நிகழ்விற்காக இருவருமே தங்கள் குடும்பத்தினரோடு ஆலயம் சென்றிருந்தனர்.

அனிக்காவும், ரூபனுமாக இருக்கும் தருணங்களில் பேசுகையில் அவளால் சகஜமாக அவனுடன் பேச முடிந்தாலும், வெளியிடத்தில் அல்லது குடும்பத்தினர் முன்பு எப்போதுமே அவளுக்கு அவனுடன் பேச உதறல்தான், அதனால் அவனை கண்டும் காணாதவள் போல இருந்துக் கொண்டாள். அதிலும் அவர்கள் இப்போது வந்திருப்பது ஆலயம் வேறு, அந்தந்த இடத்திற்குரிய மரியாதையை பின்பற்ற வேண்டுமல்லவா?

தனி தனியே சென்று குருவானவரிடம் தங்களது பாவ மன்னிப்பு பெறும் நிகழ்வை முடித்ததும், ஆலயத்திற்கு வெளியே வந்தாலும் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காமல் நின்றாள். திருமண நாட்கள் நெருங்க நெருங்க ஏற்கெனவே வெகுவாக பதட்டமாக உணர்ந்துக் கொண்டிருந்தவளுக்கு நாளையே திருமணம் எனும் போது இன்னும் பதட்டம் கூடிக் கொண்டிருந்தது.

ரூபன் அவனாகவே அருகில் வந்து அவளிடம் இரு நிமிடம் பேசி விடைப் பெற்றுச் சென்றான். ஜாக்குலின், ப்ரீதா, பிரபா இவர்களும் கூடவே இருக்க இவளை கேலியில் ஓட்டி எடுப்பதே அவர்களது முழு நேர வேலையாயிற்று.

மகளைப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோருக்கும் மிகுந்த மன நிறைவே. தன்னையே கணவர் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தவராக  தாமஸை சாரா பார்க்க அவரோ கண்களால் தன்னுடைய தவறுகளுக்காக மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தார். அவர் கையில் தன் கரத்தால் ஆதூரமாக அழுத்தி புன்முறுவல் காட்டிய சாராவின் முகபாவனை நடந்தவைகள் எல்லாம் கடந்துச் சென்றவைகளல்லவா? அதை விட்டு விடலாம் என்னும் தெளிவு இருந்தது.

அனிக்காவின் கைகளில் இரு நாள் முன்பு வரையப்பட்டிருந்த மெஹந்தி முன் தினம் சிகப்பாக இருந்து இப்போது கரும்சிகப்பாக மாறி அவள் கைகளை அழகுப் படுத்திக் கொண்டிருந்தது. அதன் அழகைப் பார்த்தவளாக லயித்து நினைவுகளில் ஆழ்ந்திருந்தவளை பிரபா எழுப்ப வர

அனிம்மா தூங்காமலா இருக்க …கல்யாணப் பொண்ணு இப்படி இருக்கலாமா… நாள் முழுக்க மாத்தி மாத்தி ஃபங்க்ஷன் இருக்க போகுது.   டயர்ட் ஆகிறப் போற… எனக் கவலைப் பட

இல்லண்ணி இப்ப கொஞ்சம் முன்னாடி தான் எழுந்தேன் என்றவள் சிந்தனைகள் கலைந்து புறப்படலானாள்.

அங்கோ ரூபனுக்கு இரவு முழுவதும் மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. அவனுக்கு ஏற்கெனவே அதிகமாக நண்பர்களில்லை, தொழில்முறை நண்பர்களும், ஓரிரு கல்லூரி நண்பர்களும் மறுநாள் ரிசப்ஷனுக்கு வருவதாக இருக்க, அவன் வீட்டினரும் சில விஷயங்களில் மிகுந்த கண்டிப்பு காட்டுபவர்கள், பிள்ளைகளும் பெரியவர்களுக்கு அடங்கிச் செல்லுபவர்கள் என்பதால் அவனுக்கு பாச்சிலர் பார்ட்டி எனும் தொல்லைகளில்லை. முழுக்க, முழுக்க திருமணக் கனவுகளில் ஆழ்ந்திருந்தான். மனைவிக்கான தன் அறையின் தற்போதைய மாற்றங்களை அடிக்கடி சரியாக இருக்கின்றனவா என்றுப் பார்த்துக் கொண்டான். கனவுகள் நனவாகி கைச் சேரும் நாள் இன்று என்று தன்னை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டவனாக புறப்படலானான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.