(Reading time: 42 - 84 minutes)

பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்கு தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டுவிலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்னபெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.

கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.ஆகவே ஆண்டவராகிய கடவுள்மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும்சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான்.இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன்ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

இவ்வாறு முதல் பைபிள் பகுதி வாசிக்கப் பட அடுத்தபடியாக,

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள்.இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது.முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையானஅலங்காரமல்ல,மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது. முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள்; தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள்.அவ்வாறே, சாரா ஆபிரகாமைத்"தலைவர்" என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.

அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராகஇருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.

இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

என்னும் பைபிளின் மற்றொரு பகுதியும் வாசிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து திருமணச் சடங்கு ஆரம்பிக்க, குருவானவர் மணமகன் மணமகள் பெற்றோரை அழைக்க, அனிக்காவின் அருகில் தாமஸிம் சாராவும், ரூபனின் அருகில் ராஜ்-ம் இந்திராவும் வர சுற்றி நெருங்கிய சொந்தங்கள் சூழ்ந்தனர்.

ரூபன், அனிக்கா நீங்கள் இருவரும் முழுமனச் சுதந்திரத்துடன் திருமணம் செய்துக் கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கின்றீர்களா? என்றுக் கேட்டு முதலில் ரூபனிடம் மைக்கை நீட்ட அவன் ஆம் என்றான்.

அடுத்ததாக அனிக்காவின் முன்னால் மைக்கை நீட்ட பக்கத்தில் ஜீவன் முகம்கொள்ளாச் சிரிப்புடன், இல்லைன்னு சொல்லு அனி என்று ரூபன் காதருகில் வந்து விசமமாய் சொல்லி வைக்க அதுவரைக்கும் தலைத்தாழ்ந்து இருந்தவள் ஒரு நொடி தலை நிமிர்ந்து எதிரில் நிற்கும் ரூபனைப் பார்த்து எழுந்த முறுவலை அடக்கி தன்னை நோக்கி நீட்டபட்ட மைக்கில் “ஆம்” என்று தன் சம்மதத்தைச் சொன்னாள்.

அனிக்காவின் நொடி நேர பார்வையும், முறுவலும் நினைவு கூறத்தக்க மென் நிகழ்வாய் ரூபனின் மனப்பெட்டகத்தில் சேர்ந்துக் கொண்டது.

அடுத்த சில செபங்களைத் தொடர்ந்து குருவானவர்

நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்துக் கொள்ள விரும்புவதால் உங்கள் வலது கைகளை சேர்த்துப் பிடியுங்கள்.இறைவன் திருமுன் , திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள்.” என கூறவும் ரூபன் தன் வலக்கரத்தோடு அனிக்காவின் வலது கரத்தைப் பற்றிக் கொள்ள அவர்கள் இணைந்த கரங்கள் மேல் மந்திரிக்கப் பட்ட நீரை தெளித்து ஆசீர்வதிக்க இருவரும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் வாக்குறுதியை அளித்தனர்.

ரூபன் என்னும் நான் அனிக்கா என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கின்றேன். இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும் , நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து என் வாழ் நாளெல்லாம் உன்னை நேசிக்கவும் , மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

அனிக்கா என்னும் நான் ரூபன் என்னும் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கின்றேன். இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும் , நோயிலும் நான் உமக்கு பிரமாணிக்கமாயிருந்து என் வாழ் நாளெல்லாம் உம்மை நேசிக்கவும் , மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.