(Reading time: 42 - 84 minutes)

“நீ என் மாமியாரா அனி?” என அடிக்கடி திட்டு வாங்குபவள், தன்னை அவ்வப்போது கணவரிடம் மாட்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பவள், தாய்க்கு சுகமில்லை என்றதும் கலங்கிய முகத்தோடே நாள் முழுதும் இருப்பவள். தன்னுடைய சுகவீனத்தின் பொழுதுகளில் சிறு பிள்ளையாய் அன்னை மடி தேடுபவள்………சாராவின் வாழ்வின் அத்தனை வண்ணக்கலவையும் அவரது மகள் அல்லவா? மகள் செல்லப் போவது தன் அண்ணன் வீடாயினும் தன்னை விட்டு பிரியும் அந்த தருணம் அவருக்கு மிகவும் மனவருத்தம் தந்தது. அணைப்பிலும், முத்தத்திலும் அவர் அன்பை வெளிப்படுத்தியவர், மகள் நெற்றியில் சிலுவை வரைந்து முகம் திருப்பி வெளியே தெரியாமல் கண்ணைத் துடைத்து விட்டுக் கொண்டிருக்க அவரை பிரபா ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

கிறிஸ் எல்லா நேரமும் தங்கையிடம் இளக்கமாய் பேசுபவனல்ல, கண்டிப்பும் கறாருமாய் இருப்பவன் தான், ஆனால் தன்னை தவிர வேறு யாரையும் அவளை கண்டிக்க விட்டதில்லை. ரூபன் விஷயத்தில் தன்னுடைய விருப்பத்தை அவனிடம் சொல்லவில்லை என்கின்ற ஆதங்கம் தவிர அவளிடம் இதுவரை ஒரு மனக் குறையும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. அதுவும் தற்போது கொஞ்ச கொஞ்சமாய் மறைந்தே போனது.

அண்ணாவென தன் தோள் சாய்ந்தவளை தலை வருடியவன் தன்னைத்தானே தேற்றிக் கொள்பவனாக……..

ஏ அனிகுட்டிமா, என்ன இங்கே ஒரே இமோஷனல் சீன் போயிட்டிருக்கு, நீ கல்யாணத்துக்கு அப்புறமா எங்களை விட்டு தூரமாவா போகப் போற இங்க பக்கத்தில தானே இருக்கப் போற……இதுக்கெல்லாமா இப்படி ஃபீல் செய்யுற”.. என்றான். அம்மாவின் கண்ணீரும், அப்பாவின் சோகமும் அவளையும் தாக்கியிருக்க, அழுகை வெடித்து விடும் போலிருந்த அவள், தன் முகபாவனையை சரியாக்க முயன்று சற்றே விசும்பினாள், கண்ணீர் துளிர்த்திருந்த தன் கண்களை சிமிட்டியவாறு விரல்களால் துடைக்கப் போக பிரபா மேக் அப் கலைந்து விடாவண்ணம் அவளருகே வந்து சரி செய்து விட்டாள். அனிக்காவை உற்சாகப் படுத்தும் படி பேசி அவள் முகத்தில் புன்முறுவல் வரும்வரை சுற்றியிருந்தோரும், கிறிஸ்ஸிம் பிரபாவும் விடவில்லை.

அத்தைக் கூட இருந்து கவனிச்சுக்கோ ஹனி பாப்பா, என சின்னவள் கரத்தில் அனிக்காவை ஒப்படைத்தாள் பிரபா……..இங்கு நிகழும் அத்தனையும் லைவ்வாக ரூபனுக்கு ஒளிபரப்பிக் கோண்டிருந்தாள் அவனின் பிரியத்திற்குரிய ஜாக்கி அக்கா..

அந்த லைவ் வீடியோவில் முதலில் அனிக்காவின் திருமண லுக்கின் அழகில் தொபுக்கடீர் என்று விழுந்து விட்டிருந்த ரூபன், பின் அவள் கண்கலங்கும் சீனில் எல்லாம் மனம் வருந்த, அதன் பின்னரான அவள் புன்னகை மேக மூட்டமான வானத்தினின்று சட்டென்று வெளிப்பட்ட நிலவின் அழகைப் போலிருக்க அதில் லயித்திருக்க, இதை ஒன்றும் அறியாத தீபன்.

“இப்ப எதுக்கு மொபைல நோண்டிட்டு உள்ள வைடா………. நாம சர்ச்க்கு வந்திட்டோம்” என அவனை அதட்டினான். ஜீவனோ ஓரக்கண்ணால் ரூபன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு கிண்டலாக சிரித்து ரூபனிடம் முறைப்பை வாங்கிக் கொண்டான்.

ஏற்கெனவே ஒரு சில உறவினர்கள் திருமண திருப்பலி காண ஆலயத்தின் உள்ளே அமர்ந்திருக்க, மணமகனும் அவனோடு கூட வந்திருந்த மற்ற ஆண்களும் உள்ளே போய் அமர்ந்தனர். திருமண தயாரிப்புக்கள் எல்லாம் சரியாக நடக்கின்றனவா எனப் பார்க்க ரூபனின் தந்தையும் அண்ணனும் விரைந்தனர்.

வீடீயோ கவரேஜ் அன்றைய கதா நாயகன் மற்றும் கதா நாயகியின் ஒரு செயலையும் விடாமல் அத்தனையையும் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

சட்டென்று ஆலயம் பரபரக்கவே ரூபன் தன்னுடையவளின் வருகையை எதிர்பார்த்து திரும்பினான். இப்போது நண்பர்கள் உறவினர்கள் கேலியை சட்டை செய்ய அவன் தயாரில்லை.

முன்னே சின்னஞ்ச்சிறார்கள் வர தாமஸ் தன் மகளை ஆலயத்திற்க்கு உள்ளே அழைத்து வந்தார், பின்னே ஏனைய உறவினர்கள் அனைவரும் வரலாயினர்.

சுற்றியுள்ளோர் பார்வை அனைத்தும் அனிக்காவை நோக்கியே இருக்க, கூச்சத்தோடு சற்று குனிந்தவாறு ஆலயத்தின் வாயிலிலிருந்து திருப்பீடத்தின் முன்னால் மணமக்களுக்காக அமைத்திருந்த இருக்கை வரை தந்தையோடு அவள் மென் நடையோடு வந்துச் சேர்ந்தாள். அவளழகுக்கு போட்டியாக அவளது கரத்தில் மலர்க் கொத்தொன்று வீற்றிருந்தது.

பலவருடக் கனவொன்றை கண்முன்னே நிஜமாக பார்க்கின்றவனுக்கு எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தான் ரூபன். மனம் மகிழ்ச்சியில் விம்மியது. அவனது வாழ்வில் முன்பொருபோதும் இதுபோல மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை என்றே எண்ணினான்.

தன்னருகில் அமர்ந்திருந்தாலும், வெட்கத்தில் தலை குனிந்தே அமர்ந்திருப்பவள் தன்னை பார்க்க மாட்டாளா என அனிக்காவின் ஒரு பார்வைக்கு ஏங்கினான்.

திருப்பலியும் ஆரம்பமானது, வழக்கமான செபங்களோடு கூட திருமணத்திற்கென்றே விசேஷமாக கணவன் மனைவி வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான பைபிள் பகுதிகள் வாசிக்கப் பட்டன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.