(Reading time: 42 - 84 minutes)

மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த கூட்டம் சற்றுக் குறைந்ததும் அவர்களை சாப்பிட அழைத்துச் சென்றனர். அங்கும் அவர்களை போட்டோகிராஃபர் விடாமல் தொடர்ந்தார். போட்டோ எடுப்பதற்காக ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி விடச் சொல்ல சிரிப்பும் வெட்கமுமாக கடந்தன மணித்துளிகள்.

ரிசப்ஷன் முடிந்து ரூபன் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டிய தருணம் வந்தது. அனிக்காவோடு துணையாக பிரபாவும் ஹனியோடு வர அவர்கள் ரூபன் வீட்டை நோக்கி புறப்பட்டனர். அவர்களைத் தவிர அனிக்காவின் பெற்றோர் மற்றும் ஏனைய பெண் வீட்டினர்கள் சாயங்காலத்தின் மாப்பிள்ளை வீட்டு விருந்திற்குச் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்ய தயாரிக்கச் சென்றனர்.

“மணமகளே மருமகளே வா, வா” என்னும் காலங்கள் கடந்தும் மறையாத அந்த பாடல் பிண்ணனியில் ஒலிக்க ரூபனின் மனைவியாக காரிலிருந்து இறங்கி கணவனோடு அனிக்கா வீட்டின் வாயிலில் நிற்க ஆலம் கரைத்து , திருஷ்டி சுற்றி மணமக்களை வரவேற்றார் இந்திரா. அங்கு அவர்களுக்கான இருக்கைகளில் அமர்த்தி பாலும் பழமும் கொடுத்து ஒருவருக்கொருவர் ஊட்டச் சொல்லி சொல்லப் போனால் ஒருவகையில் ராகிங்க் செய்து அதன் பின்னரே விட்டனர். அதனை தொடர்ந்து ரிசப்ஷனிற்கு வந்திராத ஒரு சில அக்கம் பக்கத்தவர், மற்றும் உறவினர்களின் வருகையும், அவர்களிடம் பரிசுகளும் வாழ்த்துக்களும் வாங்குவதுமாய் நேரம் கழிந்தது. அதுவரை இருவர் தோள்களையும் அழுத்திக் கொண்டிருந்த மாலைகளை கழற்ற சொல்ல அவர்களுக்கு ஆசுவாசமாயிற்று.

ரூபன் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் மாப்பிள்ளை வீட்டு அசைவ விருந்து பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் என்றாலும் கூட ஊரிலிருந்து வந்த பெரும்பாலானவர்கள் ஏறத்தாழ முக்கால் வாசி ஊரே அங்கிருந்ததால் அங்கு கலகலப்பிற்க்கு பஞ்சமில்லை. ரூபன் இப்போது அனிக்காவோடு இல்லாமல் உறவினர்களோடு ஆண்கள் கூட்டத்தில் அமர வேண்டியதாயிற்று, அங்கு அவன் பேச வேண்டியதற்கும் சேர்த்து ஜீவன் பேசிக் கொண்டிருந்தான்.

“அடுத்தால நம்ம சின்ன மாப்பிள்ளைக்குத்தான் கல்யாணம்” ஏன ஒருவர் பேச்செடுக்க,

இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டான் ஜீவன்.

தே நேரம் அனிக்காவை காணவில்லையே என கண்களால் தேடிக் கொண்டிருந்தான் ரூபன். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அவள் பிரபாவிடம் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தான், பின்னர் பிரபா இந்திராவிடமும், பெரியவர்கள் ஓரிருவரிடமும் பேசியதைப் பார்த்தான். இவளுக்கு அப்படி என்ன எனக்குச் சொல்லாமல் ரகசியம் வேண்டிக் கிடக்கிறது, பொறாமையில் வெந்தான்.

சாயங்காலம் ஆனதும் பெண்கள் வீட்டினர் பரபரப்பாக வந்து இறங்கினர். வாழைக் குலை, அரிசி மூட்டை, பண்ட பாத்திரங்கள், அனிக்காவின் உடைகள் அடங்கிய சூட்கேஸ், திருமணத்தில் கிடைத்த பரிசுப் பொருட்கள், ஏராளமான முறுக்கு கூடைகள் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா பொருட்கள் வந்து சேர்ந்தன. பொருட்கள் வைக்க இடம் போதாமல் தேடவேண்டியிருந்தது. பெண் வீட்டிலிருந்து வந்தவர்களை முறையாக உபசரித்தனர்.

அப்போதுதான் ரூபன் தன் பெற்றோரை குடும்பத்தை வரவேற்க வந்து நின்ற அனிக்காவின் முற்றிலும் மாறி இருந்த தோற்றத்தை கவனித்தான். அவன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை. அவன் விருப்பத்திற்காகத்தான் தன் அண்ணி மூலமாக அம்மாவிடமும், பெரியவர்களிடமும் பேசி அவனுக்கு பிடித்த அந்த மெரூன் வண்ண சேலையை இப்போது அவள் அழகுற உடுத்தி இருந்தாள். தனக்கு பிடித்தமான அந்த வண்ணச் சேலையில் அனிக்காவை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ரூபனுக்கு.

காலையில் அந்த தேன் நிற சேலையும், அதற்கேற்ற ஒப்பனைகளும், க்ரீடமும், வெய்ல்-மாய் தேவதையாய் தன் கையில் மலர்ச்செண்டு ஏந்தி தன்னருகில் வந்திருந்தவளின் அழகிலேயே முற்றும் முழுதுமாய் கொள்ளைப் போயிருந்தவன், இப்போதோ ஏற்கெனவே அவனுடைய மகாராணி ஆகி இருந்தவள் தன்னுடைய கிரீடம் களைந்து ஆலயத்திற்க்காக அணிந்திருந்த முக்காட்டை அகற்றியவளாய் வேறொரு தலையலங்காரத்தில் அவனுக்கு பிடித்த நிறச் சேலையில் அவனை அசரடித்துக் கொண்டிருந்தாள். அவள் அழகைப் பார்க்கையிலேயே மூச்சு திணறியது ரூபனுக்கு.

முத்தழகியே

கொஞ்சம் எனக்கு

மூச்சு விட வாய்ப்புக் கொடு

 

விடாமல் என்னை

அழகென்னும் ஆயுதம் கொண்டு

அதிரடியாய் தாக்குகிறாய்.

 

மூச்சு விடாமல் என்னை

மூர்ச்சையாகும் வரை

வீழ்த்துகிறாய்.

 

எழாமல் நானுமே

உன்னை-எந்தன்

கண்களால் விழுங்கப் பார்க்கையிலே

 

ஓரவிழி பார்வை பார்த்தே

இமை அசைவினில்- எந்தன்

உயிரினையே மீட்டுகிறாய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.