(Reading time: 42 - 84 minutes)

அவனுக்காகவே தான் உடுத்திய அந்த சேலைக்கான எதிரொலி ரூபனிடமிருந்து எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனிக்காவிடம் இருந்தாலும், இப்படியா வெட்கம் கெட்டவனாக எல்லோர் முன்னிலும் பார்த்து வைப்பான் என்று அவன் பார்வைக் கண்டு நாணம் கொண்டாள். அவனை கண்ணொடு கண் பார்க்க இயலாதவளாய் ஓரவிழி பார்வைப் பார்த்து வைத்தாள். அப்போதும் அவன் பார்வை மீளாமல் இருக்க வெட்கத்தில் தலையை குனிந்துக் கொண்டாள்.

இரவு உணவு உண்பதற்கு முன்னதான சில சம்பிரதாயங்கள் நடைபெற இருந்தன. தற்போது மாறி வரும் காலகட்டத்திற்கேற்ப இவையெல்லாம் அருகி வருகின்றன என்றாலும், ரூபன் அனிக்கா திருமணம் ஒரே குடும்பத்தில் என்றதாலும், உடன் பிறப்புக்கள் ராஜ், சாரா பெற்றோர்கள் இடத்திலிருந்து வழி நடத்திக் கொண்டிருந்த பெரியவர்கள் முறைப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்றுக் காட்டிய அக்கறையாலும் அந்த நிகழ்வு ஆரம்பித்தது.

இப்போது மணமகன் தரப்பும் மணமகன் தரப்பும் எதிர் எதிராக அமர்ந்துக் கொண்டனர், அனிக்கா மணமகள் தரப்பில் தன் சொந்தங்களோடு அமர்ந்திருக்க, எதிரில் ரூபன் மணமகன் தரப்பிலாக அமர்ந்திருந்தான்.

ஒரே குடும்பம் என்றதால் அனிக்காவின் தரப்பில் தாமஸ் சொந்தங்கள் தவிர மற்றெல்லோரும் எந்த அணியின் போய் சேருவதென யோசித்து அமருவதற்க்குள்ளாக பஞ்சமில்லாமல் சிரிப்பும், கேலியும் நடைப் பெற்றது.

ரூபனின் அருகில் அல்லது அணியில் சுற்றி இருந்த அவன் குடும்பத்தினர் அருகில் அனிக்கா வீட்டிலிருந்து வந்த முறுக்குப் பெட்டிகள் வீற்றிருந்தன. அடுத்து என்ன நிகழப் போகிறது என முன்பின் நிகழ்வைப் பார்த்திராதவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அனிக்காவின் தாய், பெரியம்மா, சித்தி முறை அனைவரும் ஒவ்வொருவராக அனிக்காவின் அத்தான் முறையிலான அனைவருக்கும் அதாவது ரூபனின் அண்ணன் தம்பி முறையிலான அனைவருக்கும் பரிசாக பணம் வழங்க வேண்டும்.

இங்கே பரிசுப் பணம் என்பது பெரிய தொகை என்பதல்ல, அவரவர் வசதிக்கு கொடுப்பது தான். ஒரு வகையில் இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்ளும் நிகழ்வு எனலாம்.

முதலில் சாரா மருமகன்களுக்கு கொடுக்க ரூபாய் எடுக்க அதனை பெரியவர் ஒருவர் அறிவித்தார், இப்போ மாமியார் பெரிய மருமகனான தீபனுக்கு பரிசு பணம் அனுப்பி வைக்கிறார் எனவும், கூட்டத்தில் கொஞ்சம் பெரிய நோட்டா அனுப்புங்க என்பதான கேலிப் பேச்சுக்கள் நடைபெற அனிக்கா வெற்றிலை, பாக்கு, மஞ்சளோடு இருந்த அந்த தாம்பாளத்தட்டை ஏந்தி பரிசை மாப்பிள்ளை வீட்டார் பக்கம் வர ரூபன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டான்.

எதிரணியிலிருந்து தங்களுக்காக பரிசை கொண்டு வந்த மருமகளை வரவேற்ற இந்திரா அள்ளி அள்ளி அந்த தட்டில் முறுக்கை எடுத்து வைக்க, இன்னும் கொஞ்சம் வைங்க” என சில சிபாரிசுகளும், என் மருமகளுக்கு கொடுக்காமலா? என பதில்களுமாய் தொடர்ந்தது நிகழ்வுகள். அடுத்து ஜீவனுக்கு பரிசுப்பணம், மறுபடி மாமியாரிடமிருந்து முறுக்கைக் கொண்டு போய் அம்மா இருக்குமிடம் சென்றுக் கொடுக்க அந்த முறுக்கு உடனே அங்கேயே பகிரப் பட்டது. சாராவின் உடன் பிறந்த சகோதரிகள் இல்லையாயினும் அவரது ஒன்று விட்ட சகோதரிகள் பெயர் சொல்லி மருமகன்களுக்கு பரிசுப்பணம் கொடுக்க, இப்போது ரூபன் தவிர அவர்களது உறவில் ராஜின் ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள் மகன்களுக்கும் சேர்த்து பரிசுப் பணம் இங்கு குவிய, முறுக்குகள் அங்கு இடம் மாறின.

முன் பின் தெரியாத இரு குடும்பங்களில் திருமணம் நிகழும் போது பெண்ணுக்கு அம்மா யார், பெரியம்மா, சித்திகள் யார் என தெரிய வைக்கும் நோக்கம் ஒரு புறமும். மாப்பிள்ளைக்கு அண்ணன் தம்பிகள் யார் , ஒன்று விட்ட உறவுகள் முதலாய் நினைவில் கொண்டு வரும், அறிமுகப்படுத்தும், அனைவரையும் ஒரே குடும்பமாய் ஒன்றிணைக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஏற்படுத்திய பெரியவர்களை பாராட்டாமல் இருக்க முடியுமா?

அது மட்டுமா மணப்பெண்ணையே பரிசுகள் கொண்டு வர பணித்திருப்பதன் பிண்ணணியில் இரண்டு குடும்பங்களுக்கும் நான் தான் பாலம் என்றதான மறைக் கருத்தும் இருக்கின்றதே. தாய் வீட்டிலிருந்து பரிசுக்களை தான் வாழ வரும் வீட்டிற்க்கு ஏந்திக் கொண்டு வருபவளை மாமியார் வீட்டினர் இவள் இன்றிலிருந்து என் வீட்டு மருமகள் நான் அவளை விட்டுக் கொடுப்பேனோ என்பதாக அவள் பரிசுக் கொண்டுவரும் தட்டில் அள்ளி அள்ளி முறுக்கை திணிக்கும் போது உரிமை உணர்வும், வரவேற்பாகவும் திகழ்கின்றதே. தன் பிறந்தகம் விட்டு புதிய குடும்பத்தில் கால் ஊணி குடும்பத்தின் அச்சாணியாய் மாறப் போகும் மருமகளுக்கு இதை விட சிறப்பாக என்ன மரியாதை செய்து விட முடியும்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.