(Reading time: 42 - 84 minutes)

அவர்கள் வாக்குறுதியைத் தொடர்ந்து குருவானவரின் தொடர்ந்த செபம் முடிந்து அவர் திருமாங்கல்யம் ஆசீர்வதித்து கொடுக்க,

ரூபன் “அனிக்கா என் அன்புக்கும் பிரமாணிக்கத்திற்கும் அடையாளமாக இந்த திருமாங்கலியத்தை பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்துக் கொள்” எனக் கூறி அவளுக்கு அணிவித்தான்.

அதே நேரம் ஆலயத்திற்க்கு வெளியே வெடிகள் வெடிக்கப் பட, அனைவரும் மகிழ்ச்சியோடு மணமக்களைப் பார்த்திருக்க, சுற்றியிருந்த கேமெராக்கள் அக்காட்சிகளை விழுங்கிக் கொண்டிருந்தன.

அடுத்து மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்தனர். தொடர்ந்த திருப்பலி செபங்கள் நிறைவுபெற திருமண கையேட்டில் மணமக்கள் இருவரும் கையொப்பமிட்டு வர திருமணச் சடங்குகள் நிறைவுப் பெற்றன. உடனே பர பரவென ஆரம்பித்தது போட்டோ எடுக்கும் வைபவம்.

ஆலயத்தினுள்ளே திருப்பலி ஆற்றிய குருவானவர்களோடும், குடும்பத்தினரோடும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தந்தையின் கரம் பற்றி ஆலயத்தின் உள்ளே வந்தவள், ரூபனின் மனைவியாக அவன் கரம் பற்றி ஆலயத்தின் உள்ளே இருந்து வெளியே வரலானாள். ரூபனின் மனைவியாகிய அந்த உரிமை தந்த மகிழ்வு, தான் எண்ணிய வண்ணம் சற்றும் குறையாமல் தன் திருமணம் நடந்த நிறைவும் களிப்பும், பெருமிதமாக அனிக்காவின் முகத்தில் தென்பட்டது.

இங்கோ ரூபனின் மகிழ்ச்சியும் அதற்கு சற்றும் குறைந்தது அல்ல, தன்னுடையவளை இரு வீட்டார் சம்மதத்தோடு , குறைவு படாத மரியாதையோடு முக்கியமாய் அவள் முகத்தில் இன்றைக்கு காணப்படும் குழப்பமற்ற அந்த நிமிர்வோடு தான் கைப்பிடித்தது எண்ணி பெருமிதம் கொண்டான். பல நாள் கனவு, பற்பல மனச் சங்கடங்கள், தவறுகள் , வருத்தங்கள் கடந்து கிடைத்த நிறைவு அவன் முகத்தை மலரச் செய்திருந்தது.

அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி மகிழ்ச்சி, மகிழ்ச்சி தவிர வேறொன்றுமில்லை. ஜீவன் பொறுப்பாக ஒரு பக்கம் எல்லாவற்றையும் கவனித்து செய்பவற்றை செய்துக் கொண்டு, இன்னொரு பக்கம் கிடைத்த வாய்ப்பிலெல்லாம் மணமக்கள் இருவரையும் கிண்டலடித்துக் கொண்டு சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.  

தன்னுடைய ஒரே மகளுக்கான திருமணத்தை தாமஸ் எவ்வாறு பிரமாண்டமாக நடத்துவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தவண்ணமே எல்லாம் அமைந்திருந்தது.திருமண ஹாலும், மேடை அமைப்பும், உணவு ஏற்பாடுகளும் அத்தனையும் மிக சிறப்பாக அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த ஹாலிற்கு புதுமண தம்பதிகள் வரவே ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துபவர்கள் ஏற்பாடுகளின் படி மணமக்களுக்கு வரவேற்பும், ஒருசில நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேக் வெட்டினர். அடுத்ததாக ரிசப்ஷன் ஆரம்பமானது.

ஒரு பக்கம் உறவினர்களோடு கூட தாமஸ் மற்றும் கிறிஸ் தொழில் முறை நண்பர்களென்றால், இன்னொரு பக்கம் ரூபனின் தொழில் முறை நண்பர்கள் என செல்வாக்கு மிகுந்த பெரிய ஆட்களாக வர அவர்களை மரியாதை குறைவு ஏற்படாமல் கவனித்து அனுப்ப வேண்டுமென்பதே அனைவரின் கவனமாக இருந்தது. ரூபன் மறவாமல் டாக்டர் ராஜேஷையும் சமாதானப்படுத்தி திருமணத்திற்கு அழைத்திருந்ததால் அவரும் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். ஷைனி (மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்) திருமணத்திற்கு பின்னர் வெளிநாட்டிலேயே இருந்து விட்டதால் இவர்கள் திருமனத்தில் கலந்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் இருந்திருந்தாலும் கலந்துக் கொள்வது சந்தேகமே.

அனிக்கா ரூபனுக்கு வாழ்த்துச் சொல்ல வந்த அவள் தோழிகள் அனைவரும் மேடையை கலகலப்பாக்கிச் சென்றனர் அதில் திவ்யாவும் உண்டு.

திவ்யாவின் பார்வை அனிக்கா ரூபன் நிச்சய விழாவின் போது போலவே தற்போதும் சில்ஜீ மக்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்கும் ஜீவன் பக்கமே இருந்தாலும், அதில் இப்போது பொறாமை என்பது துளியும் இல்லை. அவளும் தன் தோழிகளிடமிருந்து விலகி வந்து அவள் பங்கிற்கு அவனோடு இணைந்து அவர்களோடு அளவளாவலானாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவல் செய்ய இப்போது அவர்களிருவரை கிண்டல் செய்வது சில்ஜீ மக்களுடையதானது.

ரூபனின் கல்லூரி நண்பர்கள் வந்து பரிசுகளை அளித்துச் செல்ல அஷோக் தன் மனைவியோடு வந்து தந்த பரிசு மட்டும் கொஞ்சம் பெரியதாய் இருக்க என்னவென வினவினான் ரூபன். சர்ப்ரைஸ் என சொல்லி அவனுக்கு மட்டும் தெரிய கண்ணடித்தவன், கிஃப்ட் பார்த்துட்டு அப்புறமா சொல்லு எனச் சொல்லிச் செல்ல, அதனை உடனே பிரித்துப் பார்க்க ஆர்வம் இருந்தாலும் தொடர்ந்து வரிசைக் கட்டியிருந்த நண்பர்கள், குடும்பத்தினர் வாழ்த்துக்களை பெற வேண்டியிருந்ததால் சரி எனச் சொல்லி, அவனுக்கு விடையளித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.