(Reading time: 42 - 84 minutes)

அடுத்து ரூபனுக்கு பரிசு வழங்க வேண்டிய நேரம், அதுதான் அந்நிகழ்வின் நிறைவுப் பகுதி, அதன் பின்னர் மணமக்களை அருகருகே அமர்த்தி விட்டு மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டினருக்கு இரவு உணவு பரிமாறச் செய்வார்கள்.

இவ்வளவு நேரமும் இங்கும் அங்குமாய் தன் கண்முன் நடமாடிக் கொண்டு இருந்தவள் வெட்கத்தில் தலைக் குனிந்தே தனக்கான பரிசைக் கொண்டு வர, அவளே எனக்கு பரிசுதானே இதில் இன்னொரு பரிசா என்றெண்ணியவனுக்கு தன்னையறியாமல் முகத்தில் புன்முறுவல் படர்ந்தது. அவளது வருகைக்காக எழுந்து நின்றான். அவளை அனைவரும் உன் மாப்பிள்ளை கிட்ட ப்ளெஸ்ஸிங்க் வாங்கிக்கோ என்றுச் சொல்ல, தன் முன்னால் குனிய இருந்தவளை ப்ளெஸ்ஸிங்கிற்கு தாழ் பணிய தேவையென்ன? இதென்ன பத்தாம் பசலித்தனம் என்றெண்ணி தடுத்தான். அவள் நெற்றியில் சிலுவை வரைந்து, அவள் அவனுக்காக கொண்டு வந்த பரிசை வாங்கியவனாக தன்னுடனே இணையாக அவளை நிறுத்திக் கொண்டான்.

அனைவரும் சாப்பிடச் சென்றனர், விருந்தினர் வரவேற்பில் ரூபன் அனிக்காவை யாரும் கவனிக்காமல் விட்டு விட ஜீவன் உணவு பறிமாறலானான்.

இரவு உணவு நிறைவு பெற பெண் வீட்டினர் விடை பெறும் நேரம், அனிக்காவிற்க்கு பட படப்பாக, சொல்ல முடியாத விசித்திர உணர்வுகள் பாடாய் படுத்தின. நன்கு தெரிந்த குடும்பத்தில் திருமணம் ஆகி வந்திருக்கும் எனக்கே இப்படி உணர்வுகள் எழுகின்றனவென்றால் முன் பின் தெரியாத வீட்டில் மணம் முடிக்கும் பெண்கள் நிலை எப்படியிருக்கும் என எண்ணினாள். ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகள் தாங்காமல் தலை குனிந்தே நின்றாள்.

ஆறுதலாய் அவள் கரம் பற்றியது ரூபனின் கரம். ஒவ்வொருவராய் வந்து அவளை அணைத்துச் செல்ல இனிப்புக்கள் நிறைந்த பாத்திரத்தோடு இந்திராவை நெருங்கினார் சாரா.

இப்படிச் சொல்லு என்று பெரியவர்கள் பின்னிருந்து சொல்லிக் கொடுக்க, சொல்லவே முடியாமல் வார்த்தைகள் கனத்தது சாராவுக்கு……”இனி என் மகள் உங்களுடைய மகள், அவளை பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதான வார்த்தைகளை ஒருவாறாக சொல்லி முடிக்க,

இதை நீ சொல்லணும்னு தேவையே இல்லையே, அவ என்னிக்குமே என்னோட மக தான்” என்றவறாக இந்திரா சாராவை அணைத்துக் கொண்டார்.

ஹனி, ராபின் வயது வாண்டுகள் எல்லாம் கிட்டே இருந்து என்ன நடக்கின்றது? என்பதாக அனைத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லாமே அவர்களுக்கு புதிய நிகழ்வுகள் அல்லவா?

கிறிஸ், பிரபா வந்து விடைப்பெற்றுச் சென்றனர். ஒவ்வொருவராக விடைபெற இப்போது இருந்தது ரூபன் வீட்டினர் மட்டுமே. அங்கு இன்னும் மற்ற பல வேலைகள் இருந்தன, சாப்பாடு பந்தி நடந்த இடத்தை பார்வையிடுவது மற்றும் அதுவரை நிகழ்வுகளில் பணி புரிந்த அனைவருக்குமான பணப்பட்டுவாடா முக்கியமான ஒன்றாயிற்றே.

பெரும்பாலான விபரங்கள் ரூபனுக்கு தெரியும் என்பதால் அவனும் அப்பா , அண்ணாவோடு நின்றுக் கொண்டிருந்தான். எங்கு நின்றாலும் அவன் கவனம் அனிக்கா எங்கே இருக்கிறாள் என்பதாக இருந்தது. காலை போலவே இரவும் தாயை பிரியும் போது விசும்பி விட்டாள், எல்லோர் முன்பாக போய் அவளை ஆறுதல் படுத்த முடியாத நேரம் அதனால் அவனும் அவள் கண்ணீர் பார்த்து கலங்கினான்.

சரியான அழுகுணி ஆகிட்டா இவ, இனிமே அழுதான்னா இவளுக்கு இருக்கு என்றவனாக எண்ணிக் கொண்டான்.

ஜாக்குலின் அனிக்காவை அழைத்துச் சென்று அவள் எளிமையான சேலை ஒன்றை அணிய வைத்து ரூபனின் அறைக்கு வெளியெ நிறுத்தி,

நீ போ அனி, டயர்டா இருப்ப ரெஸ்ட் எடுத்துக்க, அவன் இப்ப வருவான். என்று அனுப்பினாள்.

ரூபன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனறைக்கு சென்ற அனிக்கா சில நொடிகளில் பேயறைந்தவள் போல திரும்பி வந்து வெளியே நின்று மலங்க, மலங்க முழித்தாள். இவனுக்கு காரணம் புரியவில்லை. அனிக்கா மெதுவாக கிச்சன் பக்கமாக செல்லவும் ரூபன் தன் அறையை போய் எட்டிப் பார்த்தான்.

அச்சச்சோ….இதென்ன செஞ்சு வைச்சிருக்கிறான்……. அவனுக்கு ஜீவன் செய்த வேலையை என்னச் சொல்வதென்றுப் புரியவில்லை. வீட்டில் சின்ன பிள்ளை இருக்க, அதிலும் குழந்தைகள் எல்லாவிடமும் போய் வருவார்கள், என் அறையில் எதையும் செய்து வைக்காதே என்று கண்டிப்பாக ஜீவனிடம் சொல்லி இருந்தும், அவன் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சிற்க்கு ரொமாண்டிக்காக ரூபன் அறையை, படுக்கையை அலங்கரித்து வைத்திருந்தான்.

போடாப்போ சும்மாவே இன்னிக்கு ரொம்ப மிரண்டு போய் இருக்கிறா, இவன் வேற என எண்ணிக் கொண்டு நிற்க, வெளியே தந்தை அழைக்க விரைந்தான்.

மறுபடி சிறிது நேரம் கழித்து அம்மா அவளை தன் அறைப் பக்கமாக கூட்டிச் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது உள்ளேச் சென்றவள் அரை நிமிடத்தில் திரும்பி வந்து விட்டாள். பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

வந்தவள் அரை தூக்கத்தில் சிடு சிடுத்துக் கொண்டிருந்த ராபினை தூக்க முயல அவன் தூக்க களைப்பில் சிணுங்கினான். அவனை ப்ரீதா வந்து தூக்கி சென்று விட சோஃபாவில் தனியாக அமர்ந்திருந்தாள். அவளருகே வந்து அமர்ந்தான் ரூபன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.