இருவரின் விழிகள் மட்டும் சங்கமித்து நின்றன சில நிமிடங்கள் வரை. ஓய்வின்றி உழைத்த விழிகள் தற்போது ஓய்வெடுத்துக்கொண்டன. சில நிமிடங்கள் அமைதியில் கரைய கர்ணா இமைகளைத் தாழ்த்திக்கொண்டான். இவள் பேச எத்தனிக்க, அவன் அதை மறுக்கும் விதமாக வேறு திசையில் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். கர்ணாவின் மனதில் என்ன ஓடியதென சிபியால் யூகிக்க இயலவில்லை. அவனிடம் பேச வார்த்தைகள் உள்ளுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்க, அவன் மொழி கூற மறுக்க மேலும் தொந்தரவு செய்ய மனமின்றி சாந்தியின் உதவியுடன் தன் அறையை வந்தடைந்தாள்.
இதற்கிடையில் சிபியின் தாய்க்கும் தந்தைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பதறியடித்துக்கொண்டு அவர்கள் வந்திருக்க, சிபிக்கு சிராய்ப்புக்களின் வலியைவிட ‘இவர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம்’ என்ற எண்ணமே வலியைத் தந்து கொண்டிருந்தது. காரணமாக சொல்லப்பட்டிருந்த தகவல்படி, அலுவல் ரீதியாக வெளியில் செல்லும்போது சிறு விபத்து.
ஒருவழியாக அன்று மாலை மருத்துவமனை மனமுவந்து அவளுக்கு விடுதலை தர, விருப்பமின்றியே வெளியேறினாள் தாய் தந்தையோடு. இறுதிவரை கர்ணாவிடம் மனம்விட்டுப் பேச மணித்துளிகள் இடங்கொடுக்கவில்லை.
கரையும் ஒவ்வொரு மணித்துளியும் அவளின் நிலையைக் கண்டு சிரித்துக்கொண்டிருந்தன. அவளோ எதிர்க்க ஆற்றலின்றி நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள்.
கல்லூரிக்காலத்தில் தன் கனவு, வேலை நிறுவனத்தில் கர்ணாவுடனான சந்திப்பு, படிப்படியாக அவன் வசம் சாய்ந்த மனம் என ஒவ்வொன்றையும் அசைபோட்டுக்கொண்டிருந்தது.
ஒருவேளை கர்ணாவின் கண்களில் அகப்படாமல் இருந்திருந்தால் இன்று இக்கதி நேர்ந்திருக்காதோ..? ஆனால் கிடைத்தற்கரிய பொக்கிசமாக அவன் கிடைத்தது பாக்கியமல்லவா..? அதே வேளையில் காதல் கொண்டதன் பயனாக துன்பத்தை அனுபவிப்பது தான்தானோ..? தான் மட்டுமா? தன்னால் அனுபவிப்பது தன் பெற்றோருமல்லவா..? ஒரே மகள்.. தன்னுடைய திருமணத்தைப்பற்றி எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள்..? தன் காதுபடவே பலமுறை சொல்லியிருக்கின்றனரே..! ஆனால் கர்ணாவும் தன் நம்பிக்கையை இழக்கும் அளவிற்கு எந்த இடத்திலும் நடந்து கொண்டதில்லையே..! பார்வையிலும் நடத்தையிலும் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் கூடிய கண்னியம்! எப்படி அவரால் என்னைத் தவிர்க்க முடிந்தது..?
ஆனால் அத்தனையும் மீறி எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது..? உண்மையில் தவறு நிகழ்ந்ததா..? இல்லை தவறு நடந்ததாக சித்தரிக்கிறோமா..? விதியின் பயனாக நிகழ்வதை